×

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி..!!

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் துன்புறுத்தியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ் என 9 பேரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். தந்தை, மகன் இறப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மிகுந்த சிரமப்பட்டு வருகிறேன். எனவே தனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது; சாத்தான்குளம் வழக்கு இறுதிகட்ட விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் ரகுகணேஷூக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்கள் கலைக்கக்கூடும். மேலும் இந்த விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜாமின் வழங்ககூடாது என சிபிஐ தரப்பு வாதிட்டது. இதேபோல் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பிலும் இதே கருத்தை வலியுறுத்தி ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Inspector ,Raku Ganesh ,Satankulam ,Madurai ,
× RELATED முதியவர் கொலை வழக்கு: ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்